மத்திய அரசு நடவடிக்கை திருப்தி இல்லை: திருமாவளவன்!
வியாழன், 6 நவம்பர் 2008 (15:17 IST)
இலங்கையில் இதுவரையில் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை என்று குற்றம்சாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றார்.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, கவிஞர் கனிமொழி, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
webdunia photo
FILE
உண்ணாவிரதப் பந்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்துக் கட்சி பொதுக்கூட்டம், மனித சங்கிலி, தொடர் போராட்டங்கள் என்று தமிழகத்தில் எத்தனை நிகழ்வுகள் நடைபெற்றும் இந்திய அரசு இதில் தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வராதது மட்டுமல்ல, சிங்கள இராணுவத்துக்கு உதவுவதையும் நிறுத்தவில்லை.
இலங்கையில் தொடர்ந்து இனப் படுகொலை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதை சுட்டிக் காட்டுகிற தமிழக மக்களின் உணர்வுகளை பொருட்படுத்தாத இந்திய அரசின் போக்கு வேதனையளிக்கிறது.
மத்திய அரசு போரை நிறுத்தம் செய்ய சொல்லவில்லை என்று வெளிப்படையாகவே சிங்கள அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் 3 கட்டமாக போராட்டம் நடத்துகிறோம்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என்பது ஈழத்தில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்பதுதான். இதுதொடர் பாக இன்று முதல்வரை நேரில் சந்தித்து இந்திய அரசை வலியுறுத்தி போர் நிறுத்தம் செய்வதற்கு சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், மத்திய அரசு நடவடிக்கை திருப்தி அளிப்பதாக முதலமைச்சர் கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு, 'மத்திய அரசு நடவடிக்கை திருப்தியாக இருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி கூறி இருக்கிறார். அந்த பேச்சுவார்த்தையில் உள்ளிடமாக அவை இருக்கக் கூடும்.
பொறுப்பு மிக்க பதவியில் இருப்பவர்கள் பரிமாறிக் கொள்ளும் விடயங்களை வெளியில் சொல்ல முடியாது. அந்த வகையில் முதல்வருக்கு கிடைத்த தகவலை வைத்து அவர் அவ்வாறு சொல்லியிருக்கலாம். ஆனால் இதுவரையில் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை. இது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை'' என்றார்.