ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்துக்கு தீ வைப்பு!
புதன், 5 நவம்பர் 2008 (11:57 IST)
ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்துக்கு இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உத்தபுரத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, எழுமலை என்ற இடத்தில் அவரது கார் தாக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரது கட்சியினர் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று உசிலம்பட்டி அருகே நடந்த வன்முறையின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் ஒருவர் பலியானார்.
இன்று அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நத்தம்பட்டி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பேருந்துக்கு தீ வைத்தவர்களை தேடி வருகின்றனர்.