தமிழகம் முழுவதும் பட்டாசு தீ விபத்து கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைந்துள்ளது என்றும், 316 இடங்களில் பட்டாசால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தமிழக தீயணைப்புத் துறை இயக்குனர் கே.ஆர்.ஷியாம்சுந்தர் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசை எப்படி வெடிக்க வேண்டும் என்று இந்த ஆண்டு மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பட்டாசு தீ விபத்து கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 15 விழுக்காடு குறைந்துள்ளது என்று கூறிய ஷியாம்சுந்தர், கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 368 பட்டாசு தீ விபத்துக்கள் நடந்துள்ளன என்றும் இந்த ஆண்டு 316 பட்டாசு தீ விபத்துக்கள்தான் நிகழ்ந்தன என்றும் கூறினார்.
சென்னை நகரில் 68 இடங்களில் பட்டாசு தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்த அவர், இது கடந்த ஆண்டைவிட 10 விழுக்காடு குறைவாகும் என்றார் ஷியாம்சுந்தர்.
கடந்த ஆண்டு சென்னையில் 75 பட்டாசு தீ விபத்துக்கள் நடந்தன என்றும் சென்னை நகரில் நடந்த 68 பட்டாசு தீ விபத்துக்களில் 54 விபத்துக்கள் எளிதில் தவிர்க்கக்கூடிய விபத்துக்கள் என்றும் ஷியாம்சுந்தர் தெரிவித்தார்.