வழி இல்லாமல் வாழ்விழக்கும் வனக்கிராமம்: தொட்டில் கட்டி தூக்கி வரும் பரிதாபம்!
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (13:45 IST)
கடம்பூர் பகுதியில் மலை உச்சியில் உள்ள கிராமத்திற்கு வழி இல்லாததால் அக்கிராம மக்களின் வாழ்க்கைதரம் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது கடம்பூர் மலைப்பகுதி. இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த மலைகிராமத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சந்தனக்கடத்தல் வீரப்பன் மறைவிற்கு பிறகு ஓரளவு வாழ்க்கை சீராகி வருகிறது.
webdunia photo
WD
வனத்துறையினர் இப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர். குறிப்பாக சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி ராமசுப்பிரமணியம் இப்பகுதிக்கு தனியாக முக்கியத்துவம் கொடுத்து இப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.
இப்படி ஒருபக்கம் இருக்க, கடம்பூரில் இருந்து சுமார் 500 மீட்டர் உயரத்தில் உள்ளது மல்லியம்மன்துர்க்கம் என்கின்ற வனகிராமம். இக்கிராமத்தில் 350 குடும்பங்கள் உள்ளது. மலையாளி என்ற இனத்தை சேர்ந்த இப்பகுதி மக்களின் உறவினர்கள் கொள்ளிமலை, மேட்டூர் மலை உள்ளிட்ட மலைப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் தட்பவெட்ப நிலை ஊட்டி, கொடைக்கானல்போல் இருப்பதால் இங்கு பலாப்பழம் மற்றும் கொய்யாபழம் மட்டும் இக்கிராம மக்களின் வருமானத்திற்கான ஆதாரம் ஆகும். மேலும் ராகி விளைகிறது. இந்த ராகியை இவர்களின் உணவுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இந்த கிராமத்திற்கு செல்ல தனியாக சாலைவசதி இதுவரை செய்யப்படவில்லை. பின்னர் எப்படி இந்த கிராமத்திற்கு செல்லவேண்டும் என்று கேட்க தோன்றுகிறதா? இந்த கிராமத்திற்கு கடம்பூரில் இருந்து செங்குத்தாக 500 மீட்டர் உயரத்தில் எட்டு கி.மீ., தூரம் ஒத்தைவழி பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும். இடையில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகளை கடந்துதான் செல்லவேண்டும் என்பதும் நிஜம்.
ஆம், இதுதான் இந்த மக்களின் வாழ்க்கை. இந்த மக்கள் நாள்தோறும் மல்லியம்மன்துர்க்கத்தில் இருந்து 13 கி.மீட்டர் தொலைவில் உள்ள கே.என்.பாளையத்திற்கு தலையில் 40 கிலோ எடையுள்ள கொய்யாபழ கூடையை வைத்துக்கொண்டு முதுகில் கோணிப்பையில் கட்டிய 50 கிலோ எடையுள்ள இரண்டு பலாபழத்தை சுமர்ந்துகொண்டு செங்குத்தான எட்டு கி.மீட்டர் ஒத்தைவழி பாதையில் வந்து பின் ஐந்து கி.மீட்டர் தார்சாலையில் வந்து விற்பனை செய்துவிட்டு மீண்டும் தங்கள் கிராமத்திற்கு செல்கின்றனர்.
இக்கிராம மக்களுக்கு திடீரென உடல்நிலை பாதித்தால் தொட்டில்கட்டி ஒற்றை வழி பாதையில் சுமர்ந்து கடம்பூர் வந்து அதற்கு பின்தான் பேருந்து பிடித்து சத்தியமங்கலம் வந்து சிகிச்சை பெறமுடியும்.
இவர்கள் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி செய்துகொடுக்ககோரி கவுன்சிலர் முதல் ஆட்சியர் வரை மனு செய்தனர். ஆனால் இந்த மனுக்கள் கிணற்றில் போட்ட கல்லாய் உள்ளது. இந்த சாலைக்காக பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கிவிட்டனர் என்று ஆட்சியர் அலுவலகத்தில் திட்டஅலுவலர் சார்பில் தெரிவித்தனர்.
ஆனால் இந்த தொகையை எந்த கணக்கில் வரவு வைத்து இந்த சாலையை போடுவது என தெரியவில்லை என்று பதில் கூறுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எந்த கட்சி கொடி கம்பங்களும் எங்கள் கிராமத்தில் இனி இருக்ககூடாது என முடிவு செய்த இப்பகுதி மக்கள் ஒற்றைவழி பாதை தற்போது மழையினால் மறைந்து விட்டதாகவும் இந்த பாதையை பொதுமக்களே சீர்செய்து கொள்கிறோம் என்று முடிவு செய்தனர்.
ஆனால் அதற்கு வனத்துறை அனுமதி மறுக்கிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இக்கிராமத்தில் இருக்கும் 350 குடும்பங்களின் வாழ்க்கையை மனதில் கொண்டு விரைவில் இந்த கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தந்தால் மட்டுமே காந்தியின் கனவு நினைவாகும்.