இலங்கைப் பிரச்சனை: கருணாநிதி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (10:37 IST)
இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் பற்றி விவாதிப்பதற்காக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் மீது சிறிலங்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய அரசும், தமிழக அரசும் கண்டனம் தெரிவித்தும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கையில் தமிழர்கள் மீதான இராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிட வேண்டும் என பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகளை தமிழக மக்கள் அனுப்ப வேண்டும் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
அதோடு, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். மேலும் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி விவாதிப்பதற்காக அக்டோபர் 14ஆம் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தார்.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சிகளின் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
அந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க., பா.ஜ.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்த நிலையில், இடதுசாரிக் கட்சிகள், பா.ம.க, புதிய தமிழகம், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
மேலும், இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தீர்மானமும் இயற்றப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.