சென்னையை அடுத்த மணலியில் உள்ள தனியார் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
மணலி ஆண்டார்குப்பம் அருகே தனியார் சேமிப்பு கிடங்கி உள்ளது. சுமார் 60 ஆயிரம் சதுரஅடி கொண்ட இந்த கிடங்கியில் பேப்பர் ரீல்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர், ஆயில், பேப்பர், கணினி, எலக்ட்ரானிக், கெமிக்கல் உள்பட ஏராளமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு வைக்கப்பட்டுள்ள இந்த பொருட்கள் அனைத்தும் சுங்கவரி கட்டப்பட்டதும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், ரசாயன பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவு வரை எரிந்து கொண்டே இருந்த தீயில் சேமிப்பு கிடங்கில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. சேத மதிப்பு சுமார் ரூ.200 கோடி இருக்கும் என்றும் மின் கசிவின் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.