இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் குண்டு வீச்சுக்கு பலியாவதை மத்திய அரசு தடுத்து இருக்க வேண்டும் என்றும் பசியால் தவிக்கும் தமிழர்களுக்கு உணவும், மருந்துகளும் செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்ப அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றார்.
இந்த போராட்டம் ஒரு கட்சிக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல என்று தெரிவித்த தா.பாண்டியன், மனிதாபிமான அடிப்படையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காக இதயம் உள்ளவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம் என்றார்.
இது அரசியல் நோக்கத்திற்காக எழுப்பப்படும் குரல் அல்ல என்றும் தேர்தல் அணிக்காக நடத்தப்படும் ஒத்திகை என்றும் ஒரு தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார் என்று கூறிய தா.பாண்டியன், 24 மணி நேரமும் தேர்தல், தொகுதி, வெற்றி, பதவி என்று கனவு காண்பவர்களுக்கு மனித நேயம் எங்கே இருக்க போகிறது. இது தேர்தல் களம் அல்ல, அதைப்பற்றி பெரிதும் சிந்திக்கவில்லை. சொந்த சகோதரர்கள் பக்கத்து நாட்டில் சாகவேண்டும், அதை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் கோட்டை கனவுடன் இருப்பது நியாயமா? என்றார்.
கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் பங்கு எடுத்த நாங்கள் அமைதியாக இருந்ததாக சிலர் கூறுகிறார்கள். பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சினைக்காக குரல் எழுப்பியவர்கள் நாங்கள். இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஹைதராபாத் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினோம். இவைகள் எல்லாம் அவர்களுக்கு எங்கே தெரிய போகிறது என்று தா.பாண்டியன் கூறினார்.
மத்தியில் 10 தமிழர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதிலும் முக்கிய துறைகளில் இருக்கிறார்கள். இலங்கை தமிழர்கள் கொல்லப்படு வதை கண்டித்து உடனே படுகொலையை தடுத்து நிறுத்துங்கள் என்று ஒரு வார்த்தை கண்டித்ததது உண்டா? என்று கேள்வி எழுப்பிய தா.பாண்டியன், தமிழ் மக்கள் கொல்லப்பட்டால் நாங்கள் பதவி விலகுவதாக பற்றி பரிசீலிப்போம் என்றாவது பேசி இருக்கலாமே? அதை எல் லாம் பேசாததால் தமிழ் மக்களுக்காக அவர்கள் நியாயத்திற்காக நாங்கள் போராடுகிறோம். நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்றார்.