பணத்திற்காக 2 1/2 வயது குழந்தையை கடத்தி கொன்ற உறவினர்: சென்னையில் பயங்கரம்!
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (18:00 IST)
செலவுக்கு உறவினர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து அவருடைய இரண்டரை வயது ஆண் குழந்தையை தூக்கிச்சென்று, ரயில் தண்டவாளத்தில் தலையை மோதி கொடூரமாக கொலை செய்து வீசியெறிந்து விட்டு சென்ற வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் வருமாறு: சென்னை சவுகார்பேட்டை பள்ளியப்பன் தெருவைச் சேர்ந்த ஆனந்த்- ஷைலா தம்பதியினருக்கு மோனிக் என்ற இரண்டரை வயது மகன் இருந்தான். ராஜஸ்தானை சேர்ந்த ஆனந்த், சென்னை கொருக்குப்பேட்டையில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில் விடயமாக அடிக்கடி வெளிமாவட்டங்களுக்கு ஆனந்த் சென்று வருவது வழக்கம்.
ஆனந்தின் உறவினர் ஜூக்னு (35), ஏழுகிணறு பகுதியில் சீனிவாசா தெருவில் வசித்து வந்தார். வேலை எதுவுமின்றி இருந்த ஜூக்னு அடிக்கடி ஆனந்த் வீட்டிற்கு வந்து செலவுக்கு பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
அப்படி வரும்போதெல்லாம் குழந்தையை எடுத்து கொஞ்சுவதும், அவனுக்கு சாக்லெட், மிட்டாய் என வாங்கி கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார் ஜூக்னு. ஆனந்த் வெளியூர் செல்லும் நாட்களில் ஷைலா வீட்டில் தனியாகத் தான் இருப்பார். அந்த சமயத்தில் ஜூக்னு, வீட்டு வருவதுடன் குழந்தை மோனிக்குடன் விளையாடி விட்டு செல்வார்.
உறவினர் என்பதால் ஜூக்னுவுடன் ஷைலா சகஜமாக பழகினார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜூக்னு அடிக்கடி ஷைலாவிடம் பணம் கேட்டுள்ளார். முதலில் தயங்கிய ஷைலா, பிறகு பரிதாபப்பட்டு கணவருக்குத் தெரியாமல் பணம் கொடுத்து வந்துள்ளார். இது தான் ஷைலாவுக்கு பெரும் வினையாகி விட்டது.
சில சமயங்களில் ஷைலா பணம் கொடுக்கவில்லை என்றால், உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார் ஜூக்னு. இதனால் பயந்து போன ஷைலா, ஜூக்னு கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் ஜூக்னு நேற்று மாலை ஷைலாவிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டிருக்கிறார். வியாபார விடயமாக ஆனந்த் மதுரைக்கு சென்று விட்டதால் தன்னிடம் பணம் இல்லை என்று ஷைலா கூறியிருக்கிறார். உடனே ஜூக்னு ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல குழந்தையை தூக்கி கொண்டு கடைக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்று விட்டார்.
மாலை 7 மணியாகியும் குழந்தையை ஜூக்னு வீட்டிற்கு கொண்டு வராததால் அவனது செல்பேசியில் ஷைலா தொடர்பு கொண்டு குழந்தையை கொண்டு வருமாறு கூறியிருக்கிறார். ஆனால் மேலும் ஒரு மணி நேரம் ஆகியும் ஜூக்னு குழந்தையை கொண்டு வரவில்லை. மீண்டும் ஜூக்னு செல்பேசியை தொடர்பு கொண்ட ஷைலா, குழந்தையை உடனே கொண்டு வா என்று கூறியுள்ளார். இதற்கு பதில் சொல்லாத ஜூக்னு செல்பேசியை துண்டித்து விட்டார்.
அப்போது தான் மோனிக்கை, ஜூக்னு கடத்தி சென்றிருப்பது ஷைலாவுக்கு புரிந்தது. பதற்றம் அடைந்த அவர் மதுரை சென்றிருந்த கணவருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். இதனிடையே ஜூக்னு, இரவு 8 மணிக்கு உறவினர் ஒருவருக்கு போன் செய்தார். "மோனிக்கை நான் தான் கடத்தி வைத்துள்ளேன். என்னை ஆனந்த் குடும்பத்தினர் அவமதித்து விட்டனர். எனவே ஆனந்த் மகனை கொலை செய்யப் போகிறேன். அதன் பிறகு டெல்லிக்கு ஓடி விடுவேன்'' என்று கூறியுள்ளார். அதன்பின்னர் செல்பேசி இணைப்பைத் ஜூக்னு துண்டித்து விட்டார்.
இதையடுத்து பதறிப்போன ஷைலா, யானைகவுனி காவல்துறையில் புகார் செய்தார். புகாரை பதிவு செய்த ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் காவல்துறையினர், குழந்தையை கடத்தி சென்ற வாலிபரை தேட ஆரம்பித்தனர். பின்னர் அவரது செல்பேசியை கண்காணித்ததில் ஜூக்னு எங்கிருக்கிறார் என தெரியவில்லை.
இரவு 9 மணியளவில் ஜூக்னு மீண்டும் ஷைலாவின் உறவினருக்கு போன் செய்து குழந்தையை கொலை செய்யப்போவதாக கூறியிருக்கிறார். இந்த தகவல் தெரிந்ததும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர். எனினும் ஜூக்னுவை கண்டுபிடிக்க முடியவில்லை.
மீண்டும் 10 மணியளவில் ஷைலாவின் உறவினரை தொடர்பு கொண்ட ஜூக்னு, குழந்தையை கொன்று விட்டதாகவும், அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே உடலை போட்டுவிட்டதாகவும் கூறியதுடன், என்னை யாரும் தேட வேண்டாம். என்னை பிடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். உடனடியாக காவல்துறையினர் அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு சென்று தேடினர். அப்போது திருமுல்லைவாயல்-அம்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் தண்டவாள ஓரத்தில் குழந்தை மோனிக் பிணமாக கிடந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அப்போது, மோனிக் தலை சிதறி இருந்ததுடன் தண்டவாளத்தில் ரத்தம் சிதறி காணப்பட்டது. மோனிக்கை தலைகீழாகப் பிடித்து தண்டவாளத்தில் ஓங்கி அடித்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிந்தது. மோனிக்கின் உடலைப் பார்த்து தாய் ஷைலா, உறவினர்கள் கதறி அழுதனர். நள்ளிரவு ஒரு மணிக்கு மீட்கப்பட்ட மோனிக் உடல் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஜூக்னுவை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அயல் மாநிலத்திற்கு தப்பி ஓடாமல் இருக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.