தமிழகத்தில் அரிசி கடத்தலுக்கு ஆதரவாக நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் கூறியுள்ளார்.
TN.Gov.
FILE
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.09.2008 அன்று நெல்லையில் நடந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் அரசு விழாவில் நான் பேசியது பற்றிய செய்தி 17.09.2008 அன்று நெல்லையில் அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவந்துள்ளது. எந்த பத்திரிகையிலும் ஜெயலலிதா கூறுவது போன்று இச்செய்தி திரித்து தவறாக வெளியிடப்படவில்லை.
ஆனால் 3 நாட்கள் கழித்து 18.09.2008 அன்று என்னுடைய பேச்சு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரிசி கடத்தலுக்கு ஆதரவாக நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறு.
உலகத்திலேயே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவது தமிழகத்தில் அமைந்துள்ள கருணாநிதி அரசுதான் என்பது தற்போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நல்ல பல இலவச திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருவதை அரசியலில் சகித்துக்கொள்ள முடியாத முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறை கூறிக்கொண்டு தினம் ஒரு அறிக்கையினை வெளியிடுகிறார்.
எந்த சராசரி மனிதரும் இந்த அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கும் பல நல்ல திட்டங்களை குறிப்பாக ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதை ஆதரிப்பார்களே தவிர, கடத்தலை ஆதரிக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.
எனவே நான் பேசியதின் கருத்து ஜெயலலிதாவால் திரித்துக் கூறப்பட்டுள்ளது. திசைதிருப்பும் நோக்கத்தில் என்மீது வீண்பழி சுமத்த நினைப்பது தேவையற்ற ஒன்று. தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்குவதை தடுக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று அமைச்சர் மைதீன்கான் கூறியுள்ளார்.