லீலாவதி கொலை குற்றவாளிகள் விடுதலையை ரத்து செய்யுங்கள்: என்.வரதராஜன்!
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (10:57 IST)
மதுரை லீலாவதி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என்.வரதராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், அண்ணா பிறந்தநாள் விழா போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது, சிறைக் கைதிகளுக்குத் தண்டனைக் குறைப்பை அறிவிப்பது மத்திய, மாநில அரசுகளின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
எனினும், அப்படிப்பட்ட தண்டனைக் குறைப்புச் சலுகையைத் தொழில் முறைக் குற்றம் புரிபவர்கள், நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள், அரசியல் காரணங்களுக்காக கொலைச் செயல்களை நடத்துகின்றவர்கள் ஆகியோருக்கு நீட்டிப்பது முறையாகாது.
இப்போது ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பது மாநில அரசின் முடிவு. எங்கள் கட்சியின் மதுரை மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்து, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடியதன் காரணமாக, லீலாவதி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட மாநில அரசு இடமளித்து இருப்பது வேதனைக்குரியது. இந்த நிகழ்வு கட்சித் தோழர்களின் மனங்களைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது.
எனவே, லீலாவதி வழக்கில் தண்டனைக்குள்ளானவர்களுக்கு மாநில அரசின் தண்டனைக் குறைப்பு உத்தரவை ரத்து செய்யுமாறு வேண்டுகிறோம் என்று என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.