தமிழக ஆளுநர் பர்னாலா: அறுவடை திருநாளாம் ஓணம், மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், அமைதி, மதநல்லிணக்கம் உணர்வை ஓங்கச் செய்யட்டும் என்று வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா: இறைவனிடம் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்ற தத்துவத்தை ஓணம் பண்டிகை உணர்த்துகிறது. மகா விஷ்ணுவின் திருப்பாதத்தை தலையில் தாங்கியவரும் தங்களுக்கு நல்லாட்சி தந்தவருமான மகாபலியை வரவேற்கும் வகையில் மலையாள மக்களால் கொண்டாடப்படும் நாள் ஓணம் திருநாள்.
ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மதச்சார் பின்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இந்த நன்னாளில் அனைவரும் எல்லாம் நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம்: இறைவன் வாழும் மாநிலம் கேரளம் என்பார்கள். அவ்வளவு இயற்கை எழில் சார்ந்த பகுதிகளை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி தமக்கு பின் இப்போதும் நம் மக்கள் தன் ஆட்சியில் இருந்தது போல் மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பதை அறிய ஒவ்வொரு ஆண்டும் வீடு தேடி வருகிறார் என்பது மலையாள மொழி பேசும் சகோதரர்களின் நம்பிக்கை, அவரை உற்சாகமுடன் வரவேற்பதே திருவோணம்.
மலையாள மொழி பேசும் மக்களின் திருவோணப் பெருவிழா உலக பார்வையை தன்பக்கம் ஈர்க்கும் என்றால் அது மிகையாகாது. உலக மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் இன்று போல் என்றும் சந்தோஷம் பொங்க வாழ வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி புதுச்சேரியில் உள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு இந்த அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என்று கூறி திருவோண வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.