என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (12:25 IST)
தொடர் விபத்துகளை தடுக்கக்கோரி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி.யில் தொடர்ந்து நிகழும் விபத்துகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 4ஆம் தேதி நடந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி கொளஞ்சியப்பன் என்பவர் இறந்தார்.
அவரது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம், உடனடி நிரந்தர வேலை, விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக 2வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன. நேற்று முன்தினம் சவப்பாடை ஊர்வலமும் நடந்தது. மருத்துவமனையில் உள்ள கொளஞ்சியப்பனின் உடலை வாங்காமல் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தொடரும் விபத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும். விபத்துகளில் இறந்த குடும்பத்துக்கு நிவாரண தொகையை வரையறை செய்ய வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை என்.எல்.சி, ஏ.ஐ.டி.யு.சி, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நடத்துகிறது.
கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகளால் மின்உற்பத்தி குறைந்து உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நீடித்தால் மேலும் மின்உற்பத்தி குறையும் அபாயம் ஏற்படும்.