மின்சார வாரியத்துக்கு நிலக்கரி வாங்குவதில் ஊழல் நடைபெறுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ள குற்றச்சாட்டு "கலப்படமற்ற கற்பனை' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின்வாரியத்தின் நான்கு அனல் மின் நிலையங்களின் (2,970 மெகா வாட்) ஓராண்டு மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியின் அளவு சுமார் 1.5 கோடி டன்கள்.
இந்த நிலக்கரியை, நிலக்கரி இணைப்பு நிலைக் குழுவின் ஒதுக்கீடு ஆணையின்படி இந்திய நிலக்கரி நிறுவனம் வழங்க வேண்டும். இந்திய நிலக்கரி நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கும் நிலக்கரியின் விலையை, இந்திய நிலக்கரி நிறுவனம், மத்திய அரசு ஆகியவை அவ்வப்போது நிர்ணயம் செய்கின்றன. அந்த விலையில்தான் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் நிலக்கரியைக் கொள்முதல் செய்ய முடியும்.
இந்திய நிலக்கரி நிறுவனம் 2003-ஆம் ஆண்டு வரை தேவையான நிலக்கரியை தமிழ்நாடு மின்வாரியத்துக்கும், இதர மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் வழங்கி வந்தது.
கடந்த 2004-ஆம் ஆண்டு மத்திய மின் அமைச்சகம் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி குறைவாக இருக்கும் என கணித்து மின்வாரியங்களையும், இதர மின் உற்பத்தி நிறுவனங்களையும் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலக்கரியின் இலக்கு ஆண்டுக்கு 1.56 கோடி டன்னாக நிர்ணயிக்கப்பட்டது. மார்ச் 2005-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் தனக்கு தேவையான நிலக்கரியை மத்திய பொதுத் துறை நிறுவனமான கனிமம், உலோக வர்த்தக நிறுவனம் (எம்.எம்.டி.சி) மூலம் இறக்குமதி செய்து வருகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் நேரடியாக நிலக்கரியை இறக்குமதி செய்வதில்லை. எம்.எம்.டி.சி. மூலமாகத்தான் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையை நிர்ணயம் செய்யும்போது அன்றைய சந்தை விலையையும், அதே சமயம் மற்ற நிறுவனங்கள் வாங்கிய விலையையும் ஒப்பிட்டுப் பார்த்து குறைவான விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது.
தற்போது, தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துள்ள நிலக்கரியின் விலை மற்ற நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்த விலையோடும் வெளிச் சந்தை விலையோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவாக உள்ளது.
எம்.எம்.டி.சி. மூலமாக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் தரம் எம்.எம்.டி.சி. மற்றும் தமிழ்நாடு மின்வாரியத்தின் ஒப்புதலுடன் உலக அளவில் சான்றிதழ் பெற்ற நிறுவனம் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. மின்வாரியம் நிர்ணயித்துள்ள தரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கு மட்டுமே பணம் வழங்கப்படுகிறது. எனவே, நிலக்கரி வாங்குவதில் ஊழல் என்ற புகார் கலப்படமற்ற கற்பனை" என்று தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.