இடதுசாரிகளுடன் கூட்டு பற்றி ஜெ. முடிவெடுப்பார்'

திங்கள், 1 செப்டம்பர் 2008 (11:43 IST)
காங்கிரஸ், பா.ஜ.க இடம்பெறாத மூன்றாவது அணியை அமைக்க இடதுசாரிக் கட்சிகள் எடுத்து வரும் முயற்சிகளை தாம் வரவேற்பதாகவும், தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பற்றி அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க இடம்பெற்றுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ள இடதுசாரிக் கட்சிகள், மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே தூத்துக்குடியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ, தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க அணியில் தமது கட்சி இடம்பெற்றிருப்பதால், இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து ஜெயலலிதா முடிவு செய்வார் என்று கூறினார்.

இடதுசாரிக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து, அ.இ.அ.தி.மு.க வெளிப்படையான நிலையைக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா சமீபத்தில் கூறியிருந்தார்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்ட நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க தொடர்ந்து கூட்டணியில் நீடிப்பதால், இடதுசாரிக் கட்சிகளுக்கும், தி.மு.க.விற்கும் இடையே கூட்டணி தொடர்பாக பூசல் உருவாகியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க, காங்கிரஸ் இடம்பெறாத 3-வது அணியை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இடதுசாரிக் கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்