ஜாதி, மதம் கடந்து ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும்: தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து!
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (19:04 IST)
''சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட நாம் அனைவரும் ஜாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்று பட்டுப் பாடுபட வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி உள்பட தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா: சுதந்திர தினம், பல்வேறு தியாகங்களை செய்து நாட்டின் சுதந்திரத்தை பெற்றுத்தந்த தியாகிகளை நினைத்துப் பார்க்கும் நாள். நமது நாடும் நாமும் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறோம்.
தீவிரவாதம் கோழைத்தனமானது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். நட்பையும், சமாதானத்தையும் விரும்பும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் பெரும் சவாலாக உள்ளது. அதை ஒழிப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
முதலமைச்சர் கருணாநிதி: நமது நாட்டின் சுதந்திரத் தினவிழா மிகுந்த எழுச்சி யோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது. ஏறத்தாழ 200 ஆண்டு காலம் இந்தியத் திருநாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட அந்நிய ஆதிக்கத்தைக் தகர்த்து நமது நாடு விடுதலை பெற்ற திருநாள் 1947 ஆகஸ்டு 15. நாம் பெற்ற சுதந்திரத்தால் அடைந்துள்ள பயன்கள் பலப்பல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்னும் பெருமையுடன் இந்தியத் திருநாடு திகழ்கிறது.
பெற்ற சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்று பட்டுப் பாடுபட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது இந்த சுதந்திரத் திருநாள். இந்த உணர்வோடு, தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''35 கோடி மக்களோடு சுதந்திரம் கண்ட நாம் இன்று 100 கோடிக்கு மேலாக உயர்ந்து உலகரங்கிலும் புகழோடு வளர்ந்து வருவதை நினைவு கூறும் இனிய சுதந்திர நாள் இது.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி, அவர்களது வழியில் இன்று தேசத்தின் வளர்ச்சிக்கு நாளும் உழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று சுதந்திரத் திருநாளான இந்நன்னாளில் அனைவரும் சூளுரை ஏற்போம் என்று கூறியுள்ளார்.
'''60 ஆண்டுகள் ஆன பிறகு இன்றுள்ள நிலை கவலைக்குரியது. ஒருபுறத்தில் பயங்கரவாதம். மறுபுறத்தில் அன்னிய மோகம், அரசே அடிமை சாசனத்தில் கையெழுத்திட அதீத ஆர்வம் காட்டும் நிலை, மீண்டும் ஒரு பிரிவினை ஏற்படுமோ என்கின்ற சூழ்நிலை. இவைகளை எதிர் கொண்டு சமாளிக்க, வெற்றி பெற்று பெற்ற சுதந்திரத்தை பேணிகாக்க சபதம் ஏற்போம்'' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து செய்தியில், ''இந்தியா சுதந்திரம் பெற்று இன்று 62-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எல்லோரும் சமம் என்ற ஜனநாயகத்தை அரசியலில் காப்பாற்றி வருகிறோம் என்பது பெருமைக்குரியது. சுதந்திரம் பிறப்புரிமை என்றாலும், இன்றைக்கு சுதந்திரமாக பேருந்துகளிலோ, ரயில்களிலோ, பொது இடங்களிலோ குண்டுவெடிப்புகளுக்கு பயப்படாமல் செல்லும் நிலை சாதாரண மக்களுக்குக்கூட இல்லை. இந்த சுதந்திர நாளில் நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
''சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் இன்னல்கள், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை என்று தீர்க்கப்படாத நிலையில் எவ்வளவோ பிரச்சினைகள் நமது பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக விளங்கி வருகின்றன.
எனவே இனி வருங்காலங்களில், அரசியல் சுயநலத்தை மறந்து, ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து, ஒருங்கிணைந்து உழைத்து செயல்பட்டு நமது தேசத்தை வல்லரசாக மாற்றும் வகையிலும் பாடுபட வேண்டும்'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.