சென்னையில் நடைபாதைகளிலும், சாலையோரங்களிலும் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், விளம்பர பலகைகள், அரசியல் கட்சிக் கொடி கம்பங்கள் ஆகியவை அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சென்னை நகரை அழகுப்படுத்தும் பணியில் ஒரு அங்கமாக கட்சி கொடிக் கம்பங்களும் அப்புறப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன. அதன்பிறகு ஏராளமான கொடிக் கம்பங்கள் முளைத்து விட்டன.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைபாதைகளில் பல்வேறு பகுதிகளில் கல்வெட்டுக்கள், விளம்பரப் பலகைகள், பெயர்ப்பலகைகள் மற்றும் சாலையோரங்களில் பல்வேறு பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிக் கொடி கம்பங்கள் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
எனவே நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கல்வெட்டுக்கள், விளம்பரப் பலகைகள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிக் கொடிகளை அந்தந்த உரிமையாளரே ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கட்சிக்காரர்களோ, பொது நல அமைப்பினரோ அவர்களே முன்வந்து அகற்றுவதாக இருந்தால் அவகாசம் அளிக்கப்படும்.
பொது இடங்களிலோ, சாலை ஓரங்களிலோ, தெருக்களிலோ கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள் வைக்க அனுமதி இல்லை. யாராவது வைப்பதாக இருந்தால் அவர்கள் சொந்த இடங்களில் வைத்துக் கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.