அடி‌த்த‌ட்டு ம‌க்களு‌க்கு உய‌‌ர்க‌ல்‌வி‌ கனவுதா‌ன்: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்‌று!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (10:15 IST)
''மருத்துவம், பொறியியல் உள்பட உயர்கல்வியில் கொள்ளை லாபம் அடிப்பதற்கு தனியாருக்கு இந்த அரசு தாராளமாக அனுமதிக்கிறது எ‌ன்று‌ம், இதேநிலை தொடர்ந்தால் அடித்தட்டு மக்களின் கல்விக்கனவு அடியோடு தகர்க்கப்பட்டு விடும்'' என்று‌ம் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், ''மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முதல்கட்டக் கலந்தாய்வு முடிந்து, 34 நாட்களுக்குப் பிறகு, 2ம் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்துள்ளது. இந்த நீண்ட இடைப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி, செட்டிநாடு மருத்துவக் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைக் கழகம் என்ற தகுதியை பெற்று விட்டது.

இதனால், இக்கல்லூரியில் 97 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பறிபோயிருக்கிறது. இதற்கான முழுப்பொறுப்பையும் தி.ு.க அரசும், மருத்துவக் கல்வித் துறையுமே ஏற்க வேண்டும். கலந்தாய்வுக்கு இடையே 34 நாட்கள் கொடுக்க வேண்டிய அவசியம், நோக்கம் என்ன? அரசு வேண்டுமென்று காலதாமதம் செய்திருக்கிறது என்ற கருத்து மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இதைப்போல், கோவையில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்துக்கும், பல்கலைக்கழகத் தகுதி வழங்க அரசு முடிவெடுத்திருக்கிறது. அவ்வாறு நடந்தால், கோவை கல்வி நிறுவனமும், அரசு ஒதுக்கீட்டுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கத் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்.

மருத்துவம், பொறியியல் உள்பட உயர்கல்வியில் கொள்ளை லாபம் அடிப்பதற்கு தனியாருக்கு இந்த அரசு தாராளமாக அனுமதிக்கிறது. வசதியுள்ள வெகுசிலரின் தனி உரிமையாக உயர்கல்வி மாற்றப்பட்டு விட்டது. இதற்கு அரசின் கல்வி கொள்கைதான் காரணம். உயர்கல்வித்துறை இதுபற்றி சிந்திப்பதே இல்லை.

இதேநிலை தொடர்ந்தால் அடித்தட்டு மக்களின் கல்விக்கனவு அடியோடு தகர்க்கப்பட்டு விடும். அப்போது, மக்களின் கோபத்திலிருந்து இந்த அரசு தப்ப முடியாது'' எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்