சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: அக்டோபரில் பணிகள் துவக்கம்

ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 (18:29 IST)
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜப்பான் அரசிடம் இருந்து முதற்கட்ட கடன் உதவியாக ரூ.853 கோடி ரூபாய் பெறப்படவுள்ள நிலையில், இதற்கான பணிகள் அக்டோபரில் துவங்கப்படும் எனத் தெரிகிறது. இந்த முதல் தவணையைப் பெறுவதற்கான, ஜப்பான் நாட்டுடனான ஒப்பந்தத்தில் வரும் செப்டம்பர் மாதம் தமிழக அரசு கையெழுத்திடுகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் கழக தலைவர் முனீர் ஹோடா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், இத்திட்டத்துக்கு முதல் தவணையாக ரூ.800 கோடிக்கும் மேலான தொகையை ஜப்பான் அரசு அளிக்கவுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் திட்டப்பணிகள் துவங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மொத்தம் 41 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டம், 24 கி.மீ. சுரங்க பாதையிலும், 21 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படை செலவு ரூ.11,124 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதில், கடன் உதவியாக மொத்தம் ரூ.8,645 கோடியை ஜப்பான் அரசு வழங்கவுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தை வெகுவிரைவில் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றும் உள்துறை செயலர் எல்.கே.திரிபாதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்