இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தஞ்சாவூரில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரியை தொடங்க இந்திய பார் கவுன்சிலிடம் விண்ணப்பித்தது. அதற்கு, 'மாநில அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்' என்று பார் கவுன்சில் கூறியது.
இதை எதிர்த்து நிகர்நிலை பல்கலைக்கழகம் தொடுத்த வழக்கில், 'மாநில அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை' என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பான மேல் முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பை உறுதி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய பார் கவுன்சில் மேல்முறையீடு செய்த போது, ''மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு தேவையா என்ற கேள்வி குறித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம்' என்று கூறி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
இதனால், வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டு, சட்டக் கல்லூரி தொடங்க நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு, இந்திய பார் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்து கொண்டு, மாணவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்'' என்று துரைமுருகன் கூறியுள்ளார்.