''செப்டம்பர் மாதத்தில் 653 இடங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது'' என்று மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
உள்ளாட்சி இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் செப்டம்பரில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கிராமப் பகுதிகளில் 602 இடங்களுக்கும், நகர்ப்புறத்தில் 51 இடங்களுக்கும் மொத்தம் 653 இடங்களில் தேர்தல் நடைபெறும்.
கிராமப்பகுதியில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 இடங்களிலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 இடங்களிலும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 41 இடங்களிலும், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 547 இடங்களிலும் தேர்தல் நடக்க உள்ளது.
நகர்ப்புறத்தில் சென்னை மாநகராட்சியில் 2 வார்டு உறுப்பினர், மதுரை மாநகராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கும், நகராட்சியில் 7 வார்டு உறுப்பினர் பதவிக்கும், 3ம் நிலை நகராட்சியில் 5 இடங்களிலும், பேரூராட்சி வார்டுகளில் 36 இடங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் தேர்தல் செலவு கணக்கை முடிவு வெளியான 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இதுவரை 4,000 பேர் கணக்கு காட்டாமல் உள்ளனர். வரும் இடைத்தேர்தலில் இவர்கள் போட்டியிடமுடியாது.
கடந்த தேர்தலில் வேட்புமனுதாக்கல் செய்ய யாரும் வராத 15 இடங்களில் மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு நேரடியாக சென்று மக்களிடம் பேச்சு நடத்துமாறு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று சந்திரசேகரன் கூறினார்