காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தால் தி.மு.க.வுடனாக உறவை மார்க்சிஸ்ட் கட்சி துண்டிக்கும் என்றும், செப்டம்பருக்குள் முடிவெடுத்து அகில இந்திய தலைமை குழுவுடன் ஆலோசனை நடத்தி கட்சி முடிவு எடுக்கும்'' என்று அக்கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டடையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க அரசின் கல்விக்கொள்கை, செல்வந்தர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. கல்வி கொள்ளையடிக்கும் தொழிலாகவும் மாறி வருகிறது. அரசு இதை கண்டுகொள்ளவில்லை.
சேமநல நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி தேசிய அளவில் வேலை நிறுத்தம் நடக்க உள்ளது.
மத்தியில் மாயாவதி, சந்திரபாபு நாயுடு, தேவகவுடா உட்பட பல்வேறு கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து 3வது அணியை உருவாக்க மார்க்சிஸ்ட் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ உறவு இல்லாத கட்சிகளோடு கூட்டணி பற்றி, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடி முடிவெடுக்கும்.
மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்யுமாறு தி.மு.க.வை வற்புறுத்துவோம். பிறகும் காங்கிரசுடன் உறவு தொடர்ந்தால் தி.மு.க.வுடனான உறவை மார்க்சிஸ்ட் துண்டிக்கும். செப்டம்பருக்குள் முடிவெடுக்கப்பட்டு அகில இந்திய தலைமை குழுவுடன் ஆலோசனை நடத்தி கட்சி முடிவு எடுக்கும் என்று வரதராஜன் கூறினார்.