தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் அணைகளை பாதுகாக்க, மேம்படுத்த புதிய திட்டம்!
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (18:24 IST)
உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் அணைகள் பாதுகாப்பு, மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
நாடு முழுவதும் 4,050 பெரிய அணைகள் உள்ளன. 475 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போதுள்ளவற்றில் 60 சதவீத அணைகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை.
அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாப்பதும் மிகவும் முக்கியம். இதன் ஒரு பகுதியாக உலக வங்கியின் நிதியுதவியுடன் 'அணை பாதுகாப்பு உறுதி மற்றும் சீரமைப்பு திட்டம்' தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா ஆகிய 4 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பு நிறுவனத்தின் ஒப்புதலின் பேரில் இப்பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 182 அணைகளில் அடிப்படை அணைப் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. பாதிப்புகளை சரிசெய்தல், சீரமைப்புப் பணிகள் 55 அணைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதைத் தொடர்ந்து தமிழகம், கேரளா, ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம் உள்பட 13 மாநிலங்களில் உள்ள சில அணைகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 'அணை பாதுகாப்பு உறுதி, சீரமைப்பு, பேரிடர் மேலாண்மை திட்டம்' என்ற பெயரில் துவக்கப்பட்ட இத்திட்டம் தற்போது 'அணை சீரமைப்பு.,மேம்பாட்டுத் திட்டம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலக வங்கி, மத்திய, மாநில அரசுகள், நிதியுதவி வழங்கும் அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியைக் கொண்டு 'அணை பாதுகாப்பு, மேம்பாட்டு நிதி' அமைக்கப்படும். இதன் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நிதி பெற்று திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை உலக வங்கி தயார் செய்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள 10 அணைகளில் இதை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஆய்வு நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.