சிறையிலிருந்து விடுதலையானதும் நளினி சமூகப் பணியில் ஈடுபடுவார்!
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (15:07 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, சிறையில் இருந்த வெளிவந்ததும் சமூகப் பணியில் ஈடுபடுவார் என்று அவரின் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில் சிறையில் நளினியை சந்தித்த போது இத்தகவலைத் தெரிவித்ததாகவும், ராஜீவ் காந்தி படுகொலைக்கு நளினி வருத்தம் தெரிவித்ததோடு உண்மையான குற்றவாளிகளின் பெயர்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று குறை கூறியதாக சொன்னார்.
இந்த படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக நளினி சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறிய துரைசாமி, உண்மையான குற்றவாளிகளான சிவராசன், சுபா, தாணு ஆகியோர் இறந்து விட்டனர், ஆனால் எனது பெயர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது என்றும் நளினி கூறியதாக தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய மற்றவர்களின் பெயர்களும் வெளியிடப்பட வேண்டும் என்று கூறிய அவர், கடந்த மார்ச் மாதம் பிரியங்கா காந்தி சிறையில் நளினியை சந்தித்து பேசிய குறித்து கருத்து தெரிவிக்கையில், பிரியங்கா நளினியை சந்தித்தது வியப்பானது என்றார்.