தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (09:55 IST)
தலைமறைவாக உள்ள 11 தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் தக்க பரிசு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
சுதந்திரதினத்தன்று சென்னை, நெல்லையில் குண்டு வைத்து தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணா மேம்பாலம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம், நெல்லை ஆட்சியர் அலுவலகம் உள்பட 11 இடங்களில் குண்டு வைக்க அவர்கள் சதித் திட்டம் தீட்டியது அம்பலமானது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 11 தீவிரவாதிகள் காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களில் தவுபீக் என்ற தீவிரவாதி கேரளாவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இதைத் தொடர்ந்து தவுபீக் உள்பட 11 தீவிரவாதிகளின் புகைப்படங்களை சென்னை மாநகர காவல்துறையினர் துண்டு பிரசுரமாக வெளியிட்டுள்ளனர். அவர்களுடைய பெயர் விவரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை பற்றி துப்பு கொடுத்தால் தக்க பரிசு வழங்கப்படும் என்றும், இவர்களை பற்றி தகவல் தெரிந்தால் 044-28555069, 28555045, 28555036 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேடப்பட்டு வரும் 11 தீவிரவாதிகளின் பெயர்: கோவையை சேர்ந்த சாதிக், இவனுக்கு ராஜா, டெய்லர் ராஜா என்ற பெயர்களும் உண்டு. நாகூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக், வாணிம்பாடியை சேர்ந்த முஸ்டாக் அகமது, கோவை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான், கேரளா மாநிலம் கோழிக்கோடை சேர்ந்த நூகு என்ற ரஷீத், கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த குஞ்சு முகம்மது என்ற கினி, மேலப்பாளையத்தை சேர்ந்த முகம்மது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூர், கோவை செல்வபுரத்தை சேர்ந்த அயூப் என்ற அஷ்ரப் அலி, அதிராம்பட்டியை சேர்ந்த தவுபீக், தீவிரவாதிகளின் இந்திய தலைவரும், ஹைதராபாத்தை சேர்ந்த அபு உமர், தீவிரவாதிகளின் உலகத் தலைவன் சவுதி அரேபியாவை சேர்ந்த அபு ஹம்சா.