அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், ராஜாவை நீக்க வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்!
புதன், 30 ஜூலை 2008 (15:29 IST)
''அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், ராஜா ஆகியோர் மீது ஆதாரபூர்வமாக கடுமையான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இருவரும் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் கருணாநிதி நீக்க வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சியின் போது, துணை ஆட்சியர் ஜனார்த்தனனை தாக்கியது தொடர்பாக அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்பட சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் கொலை முயற்சி, வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வடசேரி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிலம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சனையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி மற்றும் அவரது மகன் சிவபாலன் ஆகியோரை கடத்தியதோடு மட்டுமல்லாமல் கொன்றுவிடுவதாகவும் கைத்தறி அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மிரட்டியுள்ளார். இந்த பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதோடு அமைச்சர் ராஜாவுக்கு தாக்கீது அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
மாநில அமைச்சர்களே சட்டத்தை மீறி அரசு அதிகாரியை ஜாதி பெயர் சொல்லி திட்டியும், அவரை கடமை ஆற்ற விடாமல் தடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தங்களது அதிகார பலத்தை பயன்படுத்தி வழக்குகளில் உள்ள நியாயத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடக்கூடும்.
இருவர் மீதும் ஆதாரபூர்வமாக கடுமையான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் கருணாநிதி முன் வர வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.