தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் கையாளுதல் கூலியை பத்து விழுக்காடு உயர்த்தியும், இனி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த கூலியை உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், நேரடி கொள்முதல் நிலையங்கள், ரயில்வே சேமிப்பு மையங்கள் போன்றவைகளில் பணிபுரியும் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கையாளுதல் கூலி ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தி வழங்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் உயர்த்தப்பட வேண்டும் என்று மாற்றி அமைக்கப்பட்டது.
சுமைதூக்கும் தொழிலாளர்களின் நலன்களைப் பரிசீலனை செய்து, தற்போதுள்ள கையாளுதல் கூலியை பத்து விழுக்காடு உயர்த்தி வழங்கிடவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கையாளுதல் கூலி உயர்த்தப்படும் என்பதை மாற்றி, இனி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தி வழங்கிடவும் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் காரணமாக, ஏறத்தாழ 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.