மின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை: ஜெயலலிதா வலியுறுத்தல்!
வியாழன், 24 ஜூலை 2008 (16:53 IST)
''தனது கட்சிக்கு மத்திய அரசில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, கச்சத்தீவை மீட்கவும், தமிழ்நாட்டில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையை போக்கவும், முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தி.மு.க. அரசு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து தமிழ் நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. இதை நான் சுட்டிக் காட்டிய போது, மின்சாரப் பற்றாக்குறை கிடையாது என்று சொன்ன ஆற் காடு வீராசாமி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை அளித்தார் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சென்னையில் தினமும் ஒரு மணி நேர மின்சார வெட்டும், மற்ற நகரங்களில் தினமும் இரண்டு மணி நேர மின்சார வெட்டும், கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு நான்கு மணி நேர மின்சார வெட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா, மின் வெட்டு நேரத்தையும் சேர்த்து, மொத்தம் 12 மணி நேர மின் வெட்டு தமிழ்நாட்டில் அமலில் உள்ளது என்று குற்றம்சாற்றியுள்ளார்.
உண்மை நிலவரத்தை ஒழுங்காக புரிந்து கொண்டு, இனி வருங்காலங்களிலாவது பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல், தேவையில்லாமல் என் மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள ஜெயலலிதா, தனது கட்சிக்கு மத்திய அரசில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, கச்சத் தீவை மீட்கவும், தமிழ்நாட்டில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையை போக்கவும், முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.