தமிழகத்துக்கு மத்திய அரசு 100 மெகாவாட் மின்சாரம்!
வியாழன், 24 ஜூலை 2008 (15:54 IST)
தமிழகத்தில் நிலவும் கடும் மின்பற்றாக்குறையை சமாளிக்கும் பொறுட்டு, தமிழகத்துக்கு தினமும் 100 மெகாவாட் மின்சாரம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்காக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை கூறிய முதலமைச்சர் கருணாநிதி, தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையையும் எடுத்துக் கூறினார்.
இதையடுத்து, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே முதலமைச்சர் கருணாநிதியை நேற்று மாலை டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று காலை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியை தனது அலுவலகத்துக்கு அழைத்த ஷிண்டே, தமிழகத்துக்கு தினமும் 100 மெகாவாட் மின்சாரம் வழங்குவதாக அறிவித்தார்.
தமிழகம் தினமும் 1,000 மெகாவாட் மின்பற்றாக்குறையை சந்தித்துவரும் வேளையில், மத்திய அரசு 100 மெகாவாட் மின்சாரம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு மின்பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, நகர்ப்புறங்களில் தினம் 1 மணி நேரமும், மற்றப் பகுதிகளில் தினம் 2 மணி நேரமும் மின் வெட்டை அறிவித்துள்ளது. இதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் சேகரிக்கப்படுகிறது. இதே போல் தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறையையும் அறிவித்துள்ளது. இதன் மூலம் 400 மெகாவாட் மின்சாரமும் சேகரிக்கப்படுவதாகத் தெரிகிறது.