தமிழக அரசு அறிவித்துள்ள மின்வெட்டை உடனடியாக ரத்து செய்யக்கோரி பா.ம.க சார்பில் வரும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவர் ராமதாஸ், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும் போது, பொது சொத்துக்கு சேதம் விளைவிளைக்கும் கட்சிகளே பொறுப்பு ஏற்பதோடு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அ.இ.தி.மு.க. அரசு கடந்த 1992ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை முதல்வர் ரத்து செய்தார் என்று தெரிவித்த அவர், திருப்பூரில் பேருந்து தீ வைக்கப்பட்ட நிகழ்வில் பா.ம.க.வினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவியிருப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வரின் இந்த செயல் அரசியல் பழிவாங்கும் போக்கையே காட்டு என்று குற்றம்சாற்றிய ராமதாஸ், இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து சென்றாலும், உறவு தொடர்வதாக முதல்வர் கூறியிருப்பது மூன்றாவது அணியில் சேருவதற்கான கதவை தி.மு.க திறந்து வைத்திருக்கிறது என்பதைதான் இது காட்டுகிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் மின்சார உற்பத்தியை அதிகரிக்க தி.மு.க அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாற்றிய ராமதாஸ், தமிழக அரசு உடனடியாக மின் தடையை ரத்து செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பில் வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.