தமிழக மீனவர் பிரச்சினை பற்றி சிறிலங்காவுடன் பேச வேண்டும்: பிரதமரிடம் கருணாநிதி வலியுறுத்தல்!
வியாழன், 24 ஜூலை 2008 (09:54 IST)
தமிழக மீனவர்கள் கச்சத்தீவையொட்டிய பகுதிகளில் மீன் பிடிப்பதில் உள்ள பிரச்சினைகள் பற்றி, `சார்க்' மாநாட்டுக்கு செல்லும்போது சிறிலங்கா அரசுடன் பேசுமாறு பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது, பிரதமரிடத்தில் முக்கியமாக தனியாக ஏதாவது பேசினீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, பிரதமரிடம் முக்கியமாக தமிழக மீனவர்கள் கச்சத்தீவையொட்டிய பகுதிகளில் மீன்பிடிப்பதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றிப்பேசினேன். அவர் "சார்க்'' மாநாட்டிற்குச் செல்லும்போது இதைப்பற்றி அங்கே அறிவுறுத்த வேண்டுமென்று ஏற்கனவே தி.மு.க. நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை நினைவுபடுத்தினேன் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தப்பிரச்சினை குறித்து சிறிலங்கா அரசுடன் பேசுவதாக உறுதி அளித்தது மாத்திரமல்ல, வருகிற 31ஆம் தேதி டெல்லியில் தமிழகத் தலைமைச் செயலாளர், தமிழக அரசின் மீன்வளத்துறை செயலாளர், மீன் வளத்துறை இயக்குனர் ஆகியோர் இந்தப் பிரச்சினை பற்றி தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு விளக்கங்களைத் தெரிவிக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கச்சத்தீவைத் திரும்ப பெற வேண்டுமென்று பிரதமரிடம் சொன்னீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, கச்சத்தீவைக் கொடுத்ததால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதகங்களைப் பற்றி பேசினோம் என்று கூறினார்.
சேதுசமுத்திர திட்டம் பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்தியஅரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ராமர்சேது பாலம் என்று கிடையாது, அப்படி ஒன்று இருந்தால் தானே உடைப்பதற்கு என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்களே? என்று கேட்டதற்கு, அது பற்றிய வழக்கு நடந்து கொண்டிருக்கின்ற போது அங்கே வைக்கப்பட்ட வாதங்களைப் பற்றி விமர்சிப்பது வழக்குக்கு உகந்தது அல்ல என்று கருணாநிதி பதில் அளித்தார்.
எப்படியிருந்தாலும் சேதுசமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றி விடுவீர்கள் அல்லவா? என செய்தியாளர்கள் கேட்டபோது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, நீதியின் அடிப்படையில் தீர்ப்பைப் பெற்று அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கருணாநிதி கூறினார்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டம் சட்ட விரோதமான திட்டம் என்று கர்நாடகாவில் கூறி பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறதே? என்று கேட்ட போது, 1968-ல் ஏற்பட்ட ஒப்பந்தம் ஒகேனக்கல் குடிநீர் திட்டம். இப்போது படிப்படியாக அது வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றது. பல கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. எந்தெந்த பணிகள் என்றெல்லாம் காலப் பட்டியலையே நான் பல முறை வெளியிட்டிருக்கிறேன். அதிலே சில திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த திட்டம் எப்போது முடியுமென்றே நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன் என்று கருணாநிதி பதில் அளித்தார்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசு புதிய அணையை கட்டியே தீருவோம் என்றும், தமிழக அரசின் அனுமதி தேவை இல்லை என்றும் சொல்கிறார்களே? என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைக்கு வந்ததும், இதே இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றதும் உங்களுக்கெல்லாம் தெரிந்தது தான் என்று தெரிவித்த கருணாநிதி,
அந்த பேச்சுவார்த்தையில் நீங்களும் வேண்டாம், நாங்களும் வேண்டாம், உங்கள் மாநில பொறியாளர்களும் வேண்டாம், எங்கள் மாநில பொறியாளர்களும் வேண்டாம், பொதுவாக மத்திய அரசின் பொறியாளர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து - அந்த குழுவின் பரிந்துரையின் படி நடப்போம் என்று நான் சொன்ன போது - அதனை பரிசீலிப்பதாக கேரள முதலமைச்சர் இங்கே தான் சொன்னார். அதற்கு பிறகு இப்போது மாறுதலாகப் பேசுகிறார்கள் என்றார் கருணாநிதி.
உச்ச நீதிமன்றத்தில் அதற்காக ஒரு குழு அமைத்து இருக்கிறார்களே? என்று கேட்டதற்கு, அதனை நாங்கள் சட்டப்படி அணுகுவோம், அவ்வளவுதான் என்று கருணாநிதி பதில் அளித்தார்.