தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொன்று குவிப்பதைத் தடுத்து நிறுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் சென்னை வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக நிதியமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலில் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டைத் தாண்டி மீன் பிடித்தார்கள் என்று சாக்கிட்டு, தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்லும் கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதை உடனடியாக நிறுத்தவும், இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தில் எத்தகைய கண்டனத்தை தெரிவிப்பது என்பதை அறிவித்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்காக வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவினர் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.