சின்ன வெங்காயத்தின் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். இங்குள்ள விவாசயிகள் தங்கள் விளைநிலத்தில் மஞ்சள், புகையிலை உள்ளிட்ட ஆண்டுபயிர் நடவு செய்துள்ளனர். இதற்கிடையே ஊடுபயிராக சின்னவெங்காயம் பயிரிட்டுள்ளனர்.
இதுதவிர பெரும்பாலான விவசாயிகள் சின்னவெங்காயத்தை தனியாகவே பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். குறிப்பாக அரியப்பம்பாளையம், வாணிப்புத்துõர், டி.என்., பாளையம் உள்ளிட்ட நுõற்றுக்கணக்காக கிராம பகுதிகளில் சின்னவெங்காயம் அதிகம் பயிரிட்டுள்ளனர்.
கடந்த பத்து நாட்களுக்கு முன் சத்தியமங்கலம் பகுதியில் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையானது. வியாபாரிகள் விவசாயிகளிடம் கிலோ ரூ.15 வரை வாங்கினார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சின்னவெங்காயம் கிலோ ஒன்று ரூ. 10 க்கு விற்பனையாகிறது.
இதன் காரணமாக விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கிலோ ரூ.8 க்கு வாங்குகின்றனர். இதன் காரணமாக சின்னவெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது விளைச்சல் நல்லமுறையில் உள்ளது. ஆனால் திடீர் விலைவீழ்ச்சி வெங்காய விவசாயிகள் கண்ணீர்விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நடவு செய்து அறுபத்தி ஐந்து நாட்களில் அறுவடை செய்யப்படும் சின்னவெங்காயத்திற்கு பராமரிப்பு மற்றும் உரசெலவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் ஆகிறது. ஆனால் தற்போது விற்கும் விலை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே கிடைக்கும். இதனால் சின்னவெங்காய விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் கைநஷ்டப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் குமுறினர்.