உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், குல்பா சிங் யாதவ் என்ற பாஜக பிரமுகர் தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார். நேற்று மதியம் 3 மணியளவில், மூன்று பேர் அவரை சந்திக்க வந்துள்ளனர். அதன் பின்னர், அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய பிறகு, பேச்சு கொடுத்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக, அவர்களில் ஒருவர் திடீரென வயிற்றில் ஊசி செலுத்தியுள்ளார். இதையடுத்து, மூவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், அலிகார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், 3 குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் விஷ ஊசி கைப்பற்றப்பட்டதாகவும், முன்விரோதமே இந்த கொலையின் காரணமாக இருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.