நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு கட்டாயம்!

வெள்ளி, 11 ஜூலை 2008 (14:56 IST)
தமிழகத்தில் செயல்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று ஆனந்த கிருஷ்ணன் குழு பரிந்துரை செய்துள்ளது.

நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்திருந்தது.

இக்குழு தனது ஆய்வுக‌ளி‌ன் அடிப்படையிலான பரிந்துரைகளை பட்டியலிட்டுள்ளது.

அதன் விவரங்களை தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் துணைத் தலைவர் முனைவர் ராமசாமி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் விவரித்தார். அவற்றின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவி நீக்கப்பட வேண்டும். அனைத்து பதவிகளும் திறமையின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். கல்வியாளர்களையே துணை வேந்தராக நியமிக்க வேண்டும். குடும்பத்தினருக்கு பதவி அளிக்கக்கூடாது.

* மாணவர் சேர்க்கையில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

* மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்

* தமிழக அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். நன்கொடை பெறுவதை அனுமதிக்கக்கூடாது.

* நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் மாநில அரசு தலையிடும் வகையில் இருக்க வேண்டும்.

ஆனந்த கிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்