சென்னையில் ரவுடி சுட்டுக் கொலை!
வெள்ளி, 11 ஜூலை 2008 (12:20 IST)
சென்னை கே.கே.நகரில் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்ற பிரபல ரவுடி பாபா சுரேசை காவல்துறையினர் இன்று அதிகாலை சுட்டுக் கொன்றனர்.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி பாபா சுரேஷ் (28). இவன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்பட 30 வழக்குகள் இருந்தது. 4 முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி சுரேஷ், சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி அங்கிருந்து தப்பி சென்றான்.
இந்த நிலையில் சென்னை கே.கே.நகர் கடற்கரை பகுதியில் ரவுடி சுரேஷ் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறை சிறப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது, படகில் மறைந்திருந்த ரவுடி சுரேஷ், காவல்துறையினர் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசினான். இதில் காவல்துறை ஆய்வாளர் ஜவஹர் பலத்த காயம் அடைந்தார். மேலும் காவல்துறையினர் வந்த வாகனத்தை வெடிகுண்டு வீசி தாக்கினான். இதில் வாகனம் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது.
பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயன்ற ரவுடி சுரேசை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களை அரிவாளால் தாக்கினான். இதையடுத்து காவல்துறையினர் ரவுடி சுரேசை சுட்டுக் கொன்றனர். இதில் பலத்த காயம் அடைந்த ரவுடி சுரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அவனது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. காயம் அடைந்த காவல்துறை ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் நிகழ்விடத்து விரைந்து வந்து பார்வையிட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சுரேஷ் மீது 30 வழக்குகள் இருக்கிறது என்றார் காவல்துறை ஆணையர் சேகர்.