வழக்கறிஞர்கள் தொழிலில் ஈடுபடுபவர்களையே சிவில் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கருணாநிதி வரும் 18ஆம் தேதிக்குள் ஏற்காவிட்டால், காலவரையின்றி நீதிமன்றங்களை புறக்கணிப்போம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதியை வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
அதில், நீதித்துறையில் பணிபுரியும் சட்டம் பயின்ற பட்டதாரிகளை, சிவில் நீதிபதிகள் தேர்வில் அனுமதிக்கலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய பரிந்துரையை தமிழக அரசு ஏற்கக்கூடாது. வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுபவர்களை மட்டுமே சிவில் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, சங்கம் சார்பில் கொடுத்த கோரிக்கை மனுவை முதலமைச்சர் கருணாநிதி, வழக்கறிஞர்களுக்கு சாதகமாக வரும் 18ஆம் தேதிக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரையை கைவிட பெறவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் 18ஆம் தேதிக்குள் கோரிக்கையை பரிசீலித்து வழக்கறிஞர்களுக்கு சாதகமாக முடிவெடுக்காவிட்டால், காலவரையின்றி நீதிமன்றங்களை புறக்கணிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக சங்க தலைவர் பால்கனகராஜ் கூறினார்.