ரூ.3,000 கோடி முதலீட்டில் சென்னை ஒரகடத்தில் புதிய சரக்கு வாகனத் தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
ஜெர்மன் நாட்டைச் சார்ந்த டெய்ம்லர்-ஏஜி நிறுவனம் சார்பில் சென்னை சிப்காட் ஒரகடத்தில் ரூ.3000 கோடி முதலீட்டில் சரக்கு வாகன தொழிற்சாலையை அமைக்கிறது. ஆண்டொன்றுக்கு ரூ.70,000 சரக்கு வாகனங்களைத் தயாரிக்கும்.
இந்த முதலீடு அடுத்த சில ஆண்டுகளில் ரூ.4000 கோடி அளவுக்கு உயரக்கூடும். இத்திட்டம் முழுத்திறனுடன் செயல்படும்போது 3000 பேருக்கு நேரடியாகவும், 20,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாப்புகளை உருவாக்கும். ஜெர்மனி நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு இதுவரை வந்துள்ள முதலீடுகளில் இது பெரிய முதலீடாகும்.
இத்தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பாக தொழில் துறை முதன்மைச் செயலாளர் எம்.ப். ஃபரூக்கியும், ஜெர்மனியின் டெய்ம்லர்-ஏஜி நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினர் ஆன்ட்ரியாஸ் ரென்சியரும், ஹீரோ குழுமத்தின் சார்பாக ஹீரோ நிறுவனப் பணிகளின் தலைவர் சுனில் காந்த் முஞ்சாலும், டெய்ம்லர்-ஹீரோ வணிக வாகனங்கள் நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மார்க் லிஸ்டோசெட்டாரும் கையெழுத்திட்டனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.