''லாரிகள் செய்த வேலை நிறுத்தம் காரணமாக உயர்த்தப்பட்ட பொருட்களின் விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் திண்டாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்திற்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் வரவில்லை.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல், ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் தமது திரைப்படத்தை கண்டுகளித்து இருக்கிறார் கருணாநிதி. தமிழக மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் முதலமைச்சர் கருணாநிதி கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றது நாகரீகமற்ற செயல்.
மின்சார வெட்டு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, விண்ணை முட்டும் விலைவாசி என மக்கள் கண்ணை கசக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் 1.7.2008 அன்று இரவு முதல் லாரிகள் ஓடாதது மேலும் மக்களை நிலைகுலைய வைத்தது. அனைத்துப் பொருட்களின் விலையும் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டுவிட்டன.
மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டிருந்தால் 20 விழுக்காடு அளவிற்கு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருக்காது; பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டிருக்காது. எனவே உயர்த்தப்பட்ட பொருட்களின் விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.