ராமநாதபுரம் மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வரும் மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மீனவர்கள் தங்கள் போராட்டதை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சித் தலைவர் கிர்லோஷ்குமார் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு தலைவர் என்.ஜே.போஸ், வேர்க்கோடு மீனவர் சங்க தலைவர் அந்தோணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறிலங்கா சிறையில் வாடும் 5 மீனவர்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று ஆட்சித் தலைவர் உறுதி அளித்தார்.
ஆனால், மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டது. எனவே திட்டமிட்டபடி ஜூலை 10ஆம் தேதி பாம்பன் ரோடு பாலத்தில் 20,000 மீனவர்களை ஒன்று திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும். வேலைநிறுத்த போராட்டமும் தொடரும் என்றனர்.