நீதிமன்றங்களில் பணியாற்றும் அமைச்சுப்பணியாளர்களும் சிவில் நீதிபதிகள் தேர்வில் பங்கேற்பதற்கான பரிந்துரையை வாபஸ் பெறுவதில் உடனடியாக முடிவெடுக்க இயலாது என தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ளார். இதனால் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் சென்னை நீங்கலாக மற்ற இடங்களில் ஜூலை 11ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் பணியாற்றும் பி.எல். பட்டம் பெற்ற அமைச்சுப்பணியாளர்களும் சிவில் நீதிபதிகள் தேர்வில் பங்கேற்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இதனை எதித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சங்கத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் தலைமை நீதிபதியை சந்தித்து அவர்கள் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி. பரமசிவம், செயலாளர் ரகுநாதன், பொருளாளர் பி.என். மணி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலியை சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து பரமசிவம் கூறுகையில், "சிவில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அரசுக்கு செய்யப்பட்ட பரிந்துரையை வாபஸ் பெறுவது குறித்து உடனடியாக முடிவு செய்ய முடியாது என தலைமை நீதிபதி கூறிவிட்டதால் எங்களது போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்.
இதன்படி, சென்னை நீங்கலாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஜூலை 11ஆம் தேதி வரை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்குழுவில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார் பரமசிவம்.