விலை நிர்ணயம் செய்யும் உரிமை விவசாயிகளுக்கு தேவை: ராமதாஸ்!
திங்கள், 7 ஜூலை 2008 (13:47 IST)
''விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாட்டில் அவர் பேசுகையில், இந்த மாநாட்டுக்கு, அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு வந்துள்ளேன். காரணம், அடிப்படையில் நான் விவசாயி, இரண்டாவதாக மருத்துவர், மூன்றாவதாக சமூகவியலாளர், நான்காவதாக அரசியல்வாதி.
மருத்துவர், வழக்குரைஞர், தொழிலதிபர், அதிகாரி உள்ளிட்ட பிரிவினர், தாங்கள் நினைத்ததைச் செய்ய முடியும். ஆனால், விவசாயிகளுக்கு முடியாது. இந்த உழவர் கூட்டணி ஒன்றிணைந்து செயல்பட்டால் அனைத்துக் கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியும்.
நாடு முழுதும் விவசாயிகள் மட்டுமே துயரம் அனுபவித்து வருகின்றனர். தற்போது மத்திய அரசு தள்ளுபடி செய்த ரூ. 72,000 கோடி கடன் தள்ளுபடி அறிவிப்பு, மயங்கி விழுந்த விவசாயிகளுக்கு முகத்தில் தண்ணீர் தெளிப்பது போன்றது.
சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளைக் கடந்து விட்ட பிறகும், விவசாய உற்பத்தி 2.3 விழுக்காடு அளவே உள்ளது. இதை 4 விழுக்காடாக உயர்த்த முயற்சி செய்வோம் எனக் கூறி வருகின்றனர்.
விளைவிக்கும் பொருள்களுக்கான விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாயிகள் பெறுவதன் மூலமே இது நிறைவேறும் என்று ராமதாஸ் கூறினார்.