நாமக்கல் அருகில் வேன் மீது பேருந்து மோதியதில் 5 பேர் பலி!
செவ்வாய், 17 ஜூன் 2008 (12:49 IST)
நாமக்கல் அருகில் வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பஞ்சாலை அதிபர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள சின்ன புளியம்பட்டி முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த பஞ்சாலை அதிபர் சேதுராமன் (45), அவரின் மனைவி ராதா (40) ஆகியோர் தங்களின் மகளுக்கு கர்நாடக மாநிலம் பெல்லாரியில் மாப்பிள்ளை பார்த்துவிட்டு உறவினர்களுடன் ஒரு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் நாமக்கல் அருகில் உள்ள பொம்மை குட்டைமேடு என்ற இடத்தில் வேன் வந்தபோது கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இவ்விபத்தில் வேனின் முன்பகுதியில் இருந்த சேதுராமன், ராதா, இவர்களின் உறவினர்கள் போத்திராஜ், சென்னகேசவன், ஓட்டுநர் சிவக்குமார் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கிப் பலியாயினர்.
மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.