பா.ம.க.வை கூட்டணியில் வைத்துக் கொள்வதா அல்லது வெளியேற்றுவதா என்பது குறித்து முடிவு எடுக்க வரும் 17ஆம் தேதி (நாளை) தி.மு.க உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார்.
கடலூரில் 2 நாட்கள் நடந்த தி.மு.க. மகளிர் அணி மாநாட்டில் நிறைவுரையாக முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், இங்கு எடுத்து வைக்கப்பட்ட கருத்துக்களை கிராமம் தோறும், பட்டிகள் தோறும் சென்று எடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் பேசியவைகளை ஞாபகம் வைத்துக் கொண்டு உங்கள் செயல்களை தொடரும்படியும் கேட்டுக் கொள்கிறேன். சொல் வேறு, செயல் வேறு என்பது தி.மு.க.வில் இல்லை. சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்.
ஒவ்வொரு நாளும் எத்தனையோ செய்திகள் வருகின்றன. நல்லது நடந்தால் அதை நான்கு அங்குல செய்தியாகவும், அல்லது நடந்தால் அதை ஐம்பது அங்குல செய்தியாகவும் போட சில பத்திரிகைகள் நாட்டிலே இருக்கின்றன. அவைகளை பார்த்து பறக்கின்ற பாமர மக்கள் ஏராளம் இருக்கின்றார்கள். நான் மறுக்கவில்லை. அவர்களை நம்பியே சில பத்திரிகைகள் நடக்கின்றன.
கடலூரில் மாநாடு என்றால், எதற்காக? கேட்பது கழக தோழரோ, மகளிர் அணியினரோ அல்ல, பத்திரிகைக்காரர்கள். நல்ல எண்ணத்தோடு கேட்டால் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். இங்கு இருக்கும் நானோ, பொதுச் செயலாளரோ, பொருளாளரோ 4 பேர் சேர்ந்து ஒரு விஷயத்தை சொல்லிவிட முடியாது. உயர்நிலைக்குழு என்று ஒன்று இருக்கிறது. 17ஆம் தேதி மாலை உயர்நிலைக்குழு அண்ணா அறிவாலயத்தில் கூட இருக்கிறது.
அங்கே இதைப் பற்றி விவாதித்து, நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி, நம்முடைய அரசியல் கணிப்பு என்ன என்று அன்றைக்குத் தான் வெளியிட முடியும். யாரோ சிலபேர் அவசரப்பட்டு ஏதேதோ சொல்கிறார்கள் என்பதற்காக, அதே பாணியிலே நானும் கட்சி நடத்த முடியாது, நானும் அவசரப்பட முடியாது. எனவே 17ஆம் தேதி அதைப்பற்றி விரிவாக பேசுவோம் என்று கருணாநிதி கூறினார்.