சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு மாடுமேய்க்க சென்ற இருவரை கரடி கடித்து குதறியது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது ராமபயலூர்தொட்டி. இங்கு வசிப்பவர்கள் மாரி (55), அம்பியன் (45), மாதையன் (42), ஜடையன் (45). இவர்கள் நான்கு பேரும் அருகில் உள்ள கல்முக்கை வனப்பகுதிக்கு தங்கள் மாடுகளை மேய்க்க சென்றுள்ளனர். மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தபோது இவர்கள் நான்குபேரும் அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் உட்காந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அருகே இருந்த புதரில் இருந்து திடீரென ஒரு கரடி வந்தது. இந்த கரடி நான்கு பேரையும் துரத்தி, துரத்தி தாக்க தொடங்கியது. அப்போது ஜடையன் மற்றும் மாதையன் இருவரும் ஓடிவிட்டனர்.
ஆனால் மாரியும் அம்பியனும் கரடியிடம் சிக்கினர். இதில் இருவரின் முகம், காலிலும் படுபலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாதையனும், ஜடையனும் கரடி கல்லால் எறிந்து காட்டுக்குள் விட்டினர்.
பலத்த காயம் அடைந்த இருவரையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.