ஜெயலலிதாவை வளரவிட்டால் தமிழகம் குஜராத்தாக மாறும்: கனிமொழி!
திங்கள், 16 ஜூன் 2008 (10:50 IST)
மதவாத சக்திகளை ஆதரிக்கும் ஜெயலலிதாவை வளரவிட்டால், குஜராத்தைப் போல் தமிழகமும் வன்முறைக் களமாக மாறும் அபாயம் உள்ளது என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எச்சரிக்கை விடுத்தார்.
கடலூர் தி.மு.க மகளிரணி மாநில மாநாட்டில் பெரியாரின் படத்தை திறந்துவைத்து அவர் பேசுகையில், பொதுநலத்துக்காக எதிரிகளைக் கொல்வது கூட நியாயம் என்று பகவத்கீதைக்கு திலகர் உரை எழுதினார். மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தனது செயலுக்கு இதே வரியைச் சொல்லித்தான் நியாயம் கற்பித்தார்.
மதவெறி கொலைவெறியைத்தான் தூண்டும் என்பதை குஜராத்தில் கண்டோம். பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என எத்தனைப் பேர்களை அவர்கள் கொன்றார்கள் என்றும் பார்த்தோம். இந்த கொலைகாரர்களை மோடி பாராட்டியதை ஒரு பத்திரிகை வெளியிட்டிருந்தது. அப்படிப்பட்ட மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து விருந்தும் அளிக்கிறார் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அவரது ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப் பணியாளர்களுக்கும் எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த இரண்டும் ஒரே வன்முறைதான். இவர்களை வளரவிட்டால் தமிழ்நாடு குஜராத்தாக மாறும் அபாயம் உள்ளது.
சேது திட்டத்தை சேது"ராம்' திட்டம் என்று பெயர் மாற்றினாலும் பரவாயில்லை நிறைவேற்றுங்கள் என்று கருணாநிதி கூறினார். அதற்கு புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நண்பர் கருணாநிதியின் நாத்திகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமன் யார்? என்ற கேள்வியை கருணாநிதி எப்போதும் கேட்பார். அவர் மட்டுமல்ல; அவரது வாரிசுகள், வாரிசுகள் என்றால் குடும்பத்தினர் மட்டுமல்ல, தமிழ் குடும்பத்தின் ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியைக் கேட்பார்கள். சமூகத்துக்குப் பயன்படும் என்றால் நான் விபூதிகூட பூசுவேன் என்று பெரியார் கூறினார். அந்தவகையில்தான் ராமனின் பெயர்தானே வைத்துவிட்டுப் போங்கள் என்று கருணாநிதி கூறினார்.
எனவே, தெரியாமல் பேசி வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று அந்த நண்பருக்கு பாசத்தோடு சொல்லிக்கொள்கிறேன். வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற நிலை மாறி, வட நாட்டவர்கள் தமிழகத்திடம் ஆலோசனை கேட்கும் காலம் வந்துள்ளது. அதற்குக் காரணம் திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும்தான்.
சேதுசமுத்திரத் திட்டத்தை பொருளாதாரம், சுற்றுச்சூழல் என காரணங்களை கூறி எதிர்த்தார்கள். அவர்களுக்கு உரிய பதில் அளித்துவிட்டோம். மாற்று வழி இருக்கிறதா என்று கேட்டார்கள். அதற்கும் வழியில்லை என்று தெரிவித்துவிட்டோம்.
தற்போது அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் அறிவுப்பூர்வமானது அல்ல! சேதுசமுத்திரத் திட்டம் நமக்கெல்லாம் மாற்றத்தைக் கொண்டுவரும் திட்டம். நமது சுயமரியாதையை கேள்விக்குறியாக்கும் ஒன்றாக இந்தத் திட்டத்தின் எதிர்ப்பு மாறியுள்ளது. இதை விட்டுவிட்டோம் என்றால், நாம் இத்தனை ஆண்டுகள் போராடிப் பெற்றதெல்லாம் இழந்ததாகி விடும். இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பகுத்தறிவு தீபம் ஏந்தி முதல்வர் கருணாநிதி பின்னால் அணி வகுப்போம். நமது உரிமையை யாருக்காகவும் விட்டுத் தரமாட்டோம் என்று கனிமொழி கூறினார்.