விமர்சனம் செய்தால் பணியாற்ற தூண்டு‌ம்: ராமதாஸ்!

ஞாயிறு, 15 ஜூன் 2008 (11:19 IST)
''என்னை விமர்சனம் செய்தால் மேலும் பணியாற்ற தூண்டுதலாக இருக்கும்'' என்று பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதாஸ் கூறினார்.

செ‌ன்னை ராஜா அ‌ண்ணாமலைபுர‌த்‌தி‌ல் உ‌ள்ள இமே‌ஜ் அர‌ங்க‌த்‌தி‌ல் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்க தொடக்க விழா‌வி‌ல் பா.ம.க. நிறுவன தலைவ‌ர் ராமதா‌ஸ் கல‌ந்து கொ‌ண்டு பேசுகை‌யி‌ல், இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் பழமலை என்னைப் பற்றி விமர்சிப்பேன் என்று கூறினார். என்னைப் பற்றி தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். பத்திரிகையாளர்களை நான் சந்திக்கும் போது கூட, என்னைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யுங்கள் என்றும் அவ்வாறு நீங்கள் செய்யும் விமர்சனத்தை வைத்து நான் திருத்திக் கொள்வேன் என்றும் கூறி இருக்கிறேன்.

ஆகவே கவிஞர்களாகிய நீங்கள் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் விமர்சனம் செய்யலாம். அவ்வாறு விமர்சனம் செய்யும் போது நான் மேலும் பணியாற்ற தூண்டுதலாக இருக்கும். தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தை எங்கள் கட்சிக்குத் தேவை என்ற காரணத்துக்காகத் தொடங்கவில்லை.

பக்கத்தில் உள்ள இலங்கை தமிழர்களை, தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறோம். அவர்களின் விடுதலைக்காக எந்த அளவுக்கு பாடுபடுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களும், தமிழக மீனவர்களும் தினம் தினம் செத்து மடிந்து கொண்டு இருக்கிறார்கள். இலங்கை தமிழர்களைப் பற்றி பேச, எழுத கவிஞர்களாகிய நீங்கள் முன்வர வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

விழா முடிந்ததும் ராமதா‌சிட‌ம், தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணியில் நீடிக்கிறதா? இல்லையா? என்று கே‌ள்‌வி எழு‌ப்‌பின‌ர்.

இதற்கு அவர், 'இங்கு அரசியல் பேச மாட்டேன்' என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்