பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது: ராமதாஸ்!

சனி, 14 ஜூன் 2008 (09:33 IST)
அரசியல் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டும். ப‌‌ழி வா‌ங்கு‌ம் நடவடி‌க்கை‌யி‌ல் ஈடுபட‌க் கூடாது என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளிய‌ி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர், சில கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார். வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு ஏதோ பேசியதாகவும், அவர் பேசியதாக சொல்லப்படும் சி.டி. இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

குரு பே‌சியது தெரு முனை பொதுக்கூட்டம் அல்ல. மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்ட‌ம். அ‌ங்கு பொதுக்குழு உறுப்பினர்களை தவிர்த்து வேறு யாரும் அதில் பங்கேற்க முடியாது. அத்தகைய கூட்டத்தில் வேறு யாரும் பங்கேற்க முடியாத ‌நிலை‌யில் குருவின் பேச்சை ஒட்டுக்கேட்டு பதிவு செய்து கொடுத்தவர்கள் யார்? என்பதெல்லாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இது ஊருக்கே தெரிந்த ரகசியம் தான்.

குருவின் பேச்சுக்குப் பின்னால் ஒரு சதி இருப்பதாகவும், அதற்கு உடந்தையாக யார், யாரோ பேசியிருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் பேசியிருப்பதன் மூலம் குருவை மட்டுமின்றி பா.ம.க. முன்னணியினர் பலரையும் கைது செய்து பழி வாங்க ஒரு மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்றும் சதி வலை பின்னப்பட்டிருக்கிறது என்பதும் தெளிவாகவே தெரிகிறது.

பா.ம.க.வை பொறுத்தவரையில் இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை சந்திப்பது புதிதல்ல. எத்தனையோ பழிவாங்கும் நடவடிக்கையை சந்தித்து தான், தடைகளை தாண்டித்தான் அரசியலில் வெற்றி கண்டு வந்திருக்கிறோம். எங்களுக்கு எதிராக எத்தனை பழிவாங்கும் நடவடிக்கைகள் வந்தாலும், அதை கண்டெல்லாம் துவண்டு விடப்போவதில்லை.

அரசியலில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். வன்முறை பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். அதனை கண்டித்தும் வந்திருக்கிறேன்.

அதே நேரத்தில், ஆட்சியாளர்களும், பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அரசியலில் பழி வாங்கும் நடவடிக்கைகள் எந்த காலத்திலும் வெற்றி பெற்றதே இல்லை. ஒரு அரசியல் இயக்கத்தை, அது எழுப்பி வரும் அரசியல் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டுமே தவிர, அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக பழி வாங்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடக்கூடாது எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்