பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சரத்குமார் ஆர்ப்பாட்டம்!
வியாழன், 12 ஜூன் 2008 (16:11 IST)
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை உயர்ந்து விட்டது என்று மத்திய அரசு காரணம் சொல்கிறது. கச்சா எண்ணெய் விலை ஏறும். இறங்கும். இதனால் நம்நாட்டில் விலை உயர்வை தடுப்பதற்கு தனி கொள்கை உருவாக்க வேண்டாமா?
மத்திய அமைச்சரவையில் தி.மு.க. அமைச்சர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள். விலை உயர்வு பற்றி ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டபோது அதை தடுத்து நிறுத்தாதது ஏன்?
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய- மாநில அரசுகள் பதவி விலக வேண்டும். லாரி கட்டணம் 20 விழுக்காடு உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி மேலும் 50 விழுக்காடு உயரும். கம்யூனிஸ்டு கட்சிகள் மத்தியில் ஒப்புதல் அளித்து விட்டு மாநிலங்களில் மக்களை திசை திருப்புவதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்று சரத்குமார் குற்றம்சாற்றினார்.