கனரக வாகன ஓட்டுனர்கள் உரிமத்தை புதிப்பிக்க வரும்போது அரசு தரும் ஒரு நாள் சிறப்புப் பயிற்சியில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து இணை ஆணையர் நாராயண மூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில், விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் கனர வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்சியான பயிற்சி அளிப்பது பற்றிய அரசாணை கடந்த மாதம் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதன்படி, கனரக வாகன ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கும்போதும், உரிமத்தினை மேற்குறிப்பு செய்யும் போதும் ஒருநாள் சிறப்பு பயிற்சியினை பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி பயிற்சி ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கான மேற்குறிப்பு செய்வதற்கான தேதிக்கு முந்தைய 6 மாத காலத்துக்குள் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் ஒரு நாள் சிறப்பு பயிற்சியினை தரமணி சாலைப்போக்குவரத்து நிறுவனம் வடிவமைக்கும்.
போக்குவரத்து ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மட்டுமே மேற்கண்ட பயிற்சியினை அளித்து சான்றுகளை வழங்கும். கனரக வாகன ஓட்டுனர் புதுப்பித்தல், மேற்குறிப்பு செய்வதற்கான சிறப்பு பயிற்சி 1.10.2008 முதல் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.