டீச‌ல் ‌மீதான ‌வி‌ற்பனை வ‌ரி 2 ‌விழு‌க்காடு குறை‌ப்பு - த‌மிழக அரசு!

வியாழன், 5 ஜூன் 2008 (14:24 IST)
பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌‌விலைகளை ம‌த்‌‌திய அரசு உய‌ர்‌த்‌தியுள்ள நிலையில், டீச‌ல் ‌மீதான ‌வி‌ற்பனை வ‌ரியை 2 ‌விழு‌க்காடு குறை‌ப்பதாக த‌மிழக அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்க மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரியைக் குறைத்திடுமாறு பிரதமர் விடுத்த வேண்டுகோளையடுத்து டீசல் மீதான விற்பனை வரியை குறைத்திருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகு‌றி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

கடந்த ஒரு மாத காலமாகவே ஏடுகளில் தொடர்ந்து செய்தியாக வந்தபடியே, நேற்றைய தினம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உயர்த்தியதோடு, அதற்கான விளக்கத்தை பிரதமர் நாட்டிற்கு அளித்திருக்கின்றார். அந்த விளக்கத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீது அதிக அளவில் விற்பனை வரி விதிக்கும் மாநிலங்கள் அந்த வரியைக் குறைத்து சுமையைப் பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

2006-ஆம் ஆண்டிலேயே, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியபோது; விற்பனை வரியை 25 சதவீதத்திலிருந்து 23.43 சதவீதமாகக் குறைத்து அறிவித்து, அதனை நடை முறைப்படுத்திய முதல் மாநில அரசு தமிழக அரசு தான். அதன் பின்னர் மத்திய அரசு டீசல் விலையை ஓரளவு குறைத்த போதும்கூட, தமிழக அரசு குறைத்த விற்பனை வரியை மீண்டும் உயர்த்தாததால் தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு இன்றளவும் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இப்போது அவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியிருக்கும்போது விற்பனை வரியைக் குறைத்திடுமாறு தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஆலோசனை கூறியுள்ளார். அவரது ஆலோசனையை அலட்சியப்படுத்தாமல்; ஏற்கனவே 2006ஆம் ஆண்டு விற்பனை வரியைக் குறைத்தது போலவே இப்போதும் டீசல் மீதான விற்பனை வரியில் 2 சதவீதம் குறைப்பதென தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் ஆண்டுக்கு மேலும் 260 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்படும்.

இ‌‌வ்வாறு கருணா‌நி‌தி தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்